கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய் கிழமை புவனகிரி, பரங்கிப்பேட்டை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு புவனகிரி ஒன்றிய செயலாளர் ஸ்டாலின், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் விஜய் தலைமை தாங்கினார்கள்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு போராட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேசினார். இதில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் வாஞ்சிநாதன், ஆழ்வார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் கற்பனைச் செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சதானந்தம், மணவாளன், காளி.கோவிந்தராசு,ஜெயசீலன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
இதில் கடலூர் மாவட்டத்தை குடிசை இல்லா மாவட்டமாக மாற்றிட வேண்டும் என்றும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை நகர்ப்புறங்களில் விரிவுபடுத்த வேண்டும்,வீட்டு மனையில்லா பட்டா இல்லாத மக்களுக்கு இலவச மனை பட்டா வழங்க வேண்டும், நீர் நிலை சாலை புறம்போக்கில் கோயில் நிலம் வக்பு நிலங்களில் வாழும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கோரிக்கைகள் குறித்து வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.