ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அகரம் பேரூராட்சி பகுதியில் திமுக கட்சி அலுவலகம், கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் கட்சியின் பவள விழாவை முன்னிட்டு 52 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் பழனி சட்ட மன்ற தொகுதி திமுக உறுப்பினருமான ஐ .பி .செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, நடராஜன், திண்டுக்கல் ஒன்றிய திமுக செயலாளர் நெடுஞ்செழியன் அவைத் தலைவர் காமாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகரம் பேரூராட்சி மன்ற தலைவர் நந்தகோபால் வரவேற்று பேசினார் வரவேற்றார். நிகழ்ச்சியில் அகரம் பேரூர் திமுக கட்சி அலுவலகத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி திறந்துவைத்து விட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த 52 அடி உயரக்கொடிக் கம்பத்தில் கட்சிக்கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அதன் பின் பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் ஐ. பெரிய சாமி பேசும்போது, “ஒவ்வொரு முறையும் கிராமங்களாக இருந்தாலும் சரி, நகரங்களாக இருந்தாலும் சரி, கட்சிக் கொடி ஏற்றும் போது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பேரறிஞர் அண்ணாவால் தொடங்கி முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் இன்று இந்தியாவே போற்றும் அளவிற்கு சிறப்பான முறையில் ஆட்சி செய்து வரும் அண்ணன் மு க ஸ்டாலின் வரை கட்சியை கட்டிக் காத்து வருகிறார்கள். இந்தியாவில் திமுக போன்று ஒரு சிறப்பான இயக்கத்தை வேறு எங்கும் காண முடியாது. காரணம் 75 வருடங்களாக தமிழ் மக்கள் நலனுக்காக அயராது பாடுபட்ட இயக்கமாக திமுக உள்ளது.
தாடிக்கொம்பு பேரூராட்சி பகுதியில் எப்படி 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதோ, அதுபோல விரைவில் அகரம் பேரூராட்சி பகுதி மக்களின் நலன் கருதி 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்படும். அனைத்து நல திட்டங்களும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அனைவரும் சமம் என்ற நோக்கோடு செயல்பட்டு வரும் முதல்வர் ஸ்டாலின் வழியில் தம்பி உதயநிதி ஸ்டாலின் தமிழர் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தது நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்.
ஆத்தூர் தொகுதியை பொருத்தவரை 33 வருடங்களாக அடிமட்ட தொண்டன் முதல் மேல்மட்ட நிர்வாகி வரை நான் பார்த்து வருகிறேன். ஒருத்தருக்காவது என்னால் ஒரு நலத்திட்ட உதவி செய்ய முடியாமல் போயிருக்கும். அதற்காக அவரை நான் கண்டுகொள்ளவில்லை என்ற அர்த்தம் கிடையாது. அவருக்கும் சரியான நேரத்தில் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும். இது உறுதி.
ஆத்தூர் தொகுதியை பொருத்தவரை ஒவ்வொரு திமுக தொண்டனையும் என் கண் இமை போல் காத்து வருகிறேன். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழை நீர் வீணாகாமல் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்சத்திரம், அகரம், தாடிக்கொம்பு பேரூராட்சி பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில் மழை நீர் வாய்க் கால்கள் அமைத்துக் கொடுக்க தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும். அன்று முதல் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கும்” என்றார்.