உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்தனர். இதையடுத்து நடந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கார் ஏற்றிக்கொல்லப்பட்ட 4 விவசாயிகளின் அஸ்தி பேரணியாக எடுத்துவரப்பட்டு சென்னை பல்லவன் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கொல்லப்பட்ட விவசாயிகளின் அஸ்தியை விவசாய சங்கத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வானது நடைபெற்றது. சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவிலிருந்து சி.ஐ.டி.யூ. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, மாவட்ட குழுக்கள் சார்பில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு காந்தி மண்டப வளாகத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளிடம் அஸ்தியை ஒப்படைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சி.ஐ.டி.யூ. மாநிலத் தலைவர் சவுந்தரராஜன், “உயிர் நீத்த விவசாயிகளின் அஸ்தி தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்படும். சென்னை காந்தி மண்டபத்திலிருந்து வரும் 23ஆம் தேதி தொடங்கும் அஸ்தி பயணம், தமிழகம் முழுவதும் 28 மையங்களில் வரும் 26ஆம் தேதி வரை அஞ்சலி செலுத்தப்பட உள்ளது” என தெரிவித்தார்.