Skip to main content

"இது அரசு விழாவா? அதிமுக விழாவா?" - எம்.எல்.ஏ கேள்வியால் பரபரப்பான அரசு நிகழ்ச்சி!

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

Problem between admk  and dmk in kanyakumari

 

தமிழக அரசு சார்பில் பெண்களுக்கான திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி, இன்று (16.02.2021) குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் தக்கலை, குருந்தன்கோடு மற்றும் திருவட்டார் ஒன்றியங்களைச் சேர்ந்த 1,776 பயனாளிகளுக்கும் சேர்த்து 14 கிலோ தங்கம் மற்றும் 7 கோடியே 93 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அரவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நகை மற்றும் உதவித் தொகை வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால், அதில் இருவரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் அங்கு கலந்து கொண்டிருந்த அதிமுக மா.செ.க்கள் அசோகன் மற்றும் ஜாண்தங்கம் இருவரும் வழங்கினார்கள்.
 

அப்போது அங்கு இருந்த பத்மனாபபுரம் எம்.எல்.ஏ., மனோ தங்கராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகள் அல்லது அரசு ஊழியர்கள்தான் பயனாளிகளுக்கு அரசின் உதவிகளை வழங்கவேண்டும். அரசின் உதவிகளை வழங்குவதற்கு அதிமுக மா.செ.க்கள் மக்கள் பிரதிநிதிகளா அல்லது அரசு ஊழியர்களா? இது என்ன அரசு விழாவா? அல்லது அதிமுக விழாவா? எனக் கேள்வி கேட்டு எதிர்ப்பை காட்டினார்.


உடனே, அங்கிருந்த அதிமுகவினரும் மனோ தங்கராஜின் பேச்சுக்கு எதிர்ப்பைக் காட்டி சத்தம் போட்டனர். பின்னர் அங்கிருந்த திமுகவினரும் அதிமுகவினரை சத்தம் போட்டனர். இதனால்  இரு தரப்பினருக்குமிடையே ஒரு கட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் மேடையில் இருந்த சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கீழே இறங்கினார்கள். இதையடுத்து பயனாளிகளும் இருக்கையை விட்டு எழுந்தனர். இதனால் அங்கு சத்தமும் சலசலப்பும் ஏற்பட்டு பதட்டமான சூழ்நிலை உருவானது.


இதைத் தொடா்ந்து அங்குவந்த தக்கலை டி.எஸ்.பி. ராமசந்திரன், இருதரப்பினரையும் சமாதானம் செய்து கடைசியில் திமுக எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ், வலியுறுத்தியதைப் போல் அரசு ஊழியரான சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி பயானாளிகளுக்கு உதவிகளை வழங்கினார். அப்போது அதிமுகவினர் ‘ஜெயலலிதா வாழ்க’ என்றும் திமுகவினர் ‘கலைஞர் வாழ்க’ என்றும் கோஷத்தை எழுப்பி கலைந்து சென்றனர். இதனால் அந்த நிகழ்ச்சி முடியும் வரை பரபரப்பாகவே இருந்தது.

 

 

சார்ந்த செய்திகள்