கிராம ஊராட்சிகளின் அடிப்படை கட்டுமானமாக திகழ்வது கிராம சபை தீர்மானங்கள். ஊராட்சியின் வளர்ச்சி, கிராமங்களின் தேவை, கிராம மக்களின் தேவைகளை கிராம சபை தீர்மானங்களாக இயற்றி நிறைவேற்றப்பட்டு வருகிறது. நீதிமன்றங்களில் கூட இந்த தீர்மானங்களுக்கு சிறப்பிடம் உண்டு.
ஆனால் கடந்த 2016க்கு பிறகு நடந்த கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்களால் கொண்டுவரப்பட்ட கோரிக்கைகள் கிராம சபை தீர்மான நோட்டுகளில் எழுதப்படாமல் கோரிக்கை மனுக்களாகவே காணாமல் போய்விட்டது. ஆனாலும் கடந்த சில வருடங்களாக இளைஞர்கள் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு ஊராட்சியின் வரவு, செலவுகள் பற்றி கேட்டு வருவதுடன் ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற நாசகார திட்டங்களுக்கு எதிராகவும் தீர்மானங்களை கொண்டு வர மனுக்களாக கொடுத்தனர். சில ஊராட்சிகளில் தீர்மான நோட்டுகளில் எழுதப்பட்டாலும் பல கிராமங்களில் எழுதப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் பதவி ஏற்ற பிறகு நடக்கும் முதல் கிராம சபைக் கூட்டம் ஜனவரி 26ஆம் தேதி நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் மக்கள் அதிகம் கலந்து கொள்ள வேண்டும் என்பதே புதிய உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் எண்ணமாக உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் நடக்க உள்ள கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்பதற்காக புதிய ஊராட்சி நிர்வாகம் அசத்தலான பரிசுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
அதாவது கிராம ஊராட்ச்சியின் வளர்ச்சிக்காக கிராம சபைக் கூட்டத்திற்கு வந்து சிறந்த ஆலோசனைகளை சொல்லும் 3 பேருக்கு பரிசு வழங்கும் திட்டம், அதே போல கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்களின் பெயர்களை எழுதி குலுக்கல் முறையில் தோ்வு செய்து 10 பேருக்கு பரிசு வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டத்திற்கு கிராம மக்களை இழுத்து வர இப்படி ஒரு அசத்தலான பரிசுத்திட்டத்தை அறிவித்திருப்பது மக்களிடம் பரபரபாக உள்ளது.