பிரியா மரணம் தொடர்பாக நடந்தது மருத்துவர்களின் கவனக்குறைவுதான் என்பதை அரசு நேரடியாகவே ஒப்புக்கொண்டது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் நீர் வழித்தடங்களின் அருகாமையில் வசிக்கும் மக்களுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “பிரியா மரணம் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கை ஓரிரு நாளில் கிடைக்கும். நேற்றைக்கு நடந்ததைக் கவனக் குறைவு என்பதை நேரடியாகவே ஒப்புக்கொண்டது இந்த அரசு. அதற்கான தீர்வு என்கிற வகையில் மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலும் நடவடிக்கைகள் துறை ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எடுக்கப்படும் என்றும் சொல்லி இருக்கிறோம். அவர்களைப் போல் நாங்கள் தப்பித்தெல்லாம் செல்லமாட்டோம். உண்மை என்னவோ அதை உலகறிய அறிவிப்போம். மருத்துவத்துறை குறைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதையும் மருத்துவர்களுக்கு அறிவித்துள்ளோம்” எனக் கூறினார்.