சேலத்தில், தனியார் பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் சென்று கொண்டிருந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவி பரிதாபமாக பலியானாள்.
சேலம் செட்டிச்சாவடி நெல்லிக்கரடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மகள் நிருதியா (வயது 15). தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாள். அக். 10- ஆம் தேதி பள்ளியில் சிறப்பு வகுப்பு முடிந்து, தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாள்.
திரிவேணி கார்டன் அருகே சென்று கொண்டிருந்தபோது, தனியார் கல்லூரிப் பேருந்து அவர்களை முந்திச்செல்ல முயன்றது. அப்போது பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தந்தைக்கும், மகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
அந்த வழியாகச் சென்றவர்கள் இருவரையும் மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் இருந்த மாணவியை, மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (அக். 11) மாணவி உயிரிழந்தாள்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கன்னங்குறிச்சி காவல்நிலைய காவல்துறையினர் மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.