Skip to main content

ஊரடங்கு காலத்தில் நரிக்குறவர் இன மக்களுக்கு உதவிய நிறுவனம்...

Published on 17/05/2021 | Edited on 18/05/2021

 

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகில் காரை பகுதியில் உள்ளது மலையப்பநகர். இப்பகுதியில் வசித்த நரிக்குறவ இன மக்களின் நாடோடி வாழ்க்கை நிலையை அறிந்த மாவட்ட ஆட்சியர் மலையப்பன் (காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்தவர் மலையப்பன்) அம்மக்கள் படும் துயரத்தைத் தீர்க்க ஏதேனும் ஒன்று செய்யவேண்டும் என எண்ணி, பெரம்பலூர் அருகே காரை என்ற பகுதியில் அரசுக்குச் சொந்தமான ஒரு இடத்தை தேர்வு செய்து, அங்கே அவர்கள் குடும்பத்தோடு குடிசை அமைத்து ஒரே இடத்தில் வாழ்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

 

அவரது முயற்சியினால், தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் தங்கள் குடும்பத்தினரோடு அங்கு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக அவர்களுக்காகத் தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகிறார் நரிக்குறவர்களின் தலைவராக உள்ள காரை சுப்பிரமணியன். பிள்ளைகள் படிப்பதற்குப் பள்ளிக்கூடம்,  தங்குவதற்கு விடுதி, தண்ணீர் வசதி போன்ற அத்தியாவசிய தேவைகளை அதிகாரிகளிடம் கேட்டுப் பெற்றுக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்ல இவர் கலைக்கூத்தாடி இனமக்கள் பலரையும் அழைத்து வந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் ஒரு இடம் கொடுத்து அவர்களையும் குடியமர்த்தி குடும்பத்தோடு வாழ்வதற்கு வழிவகை செய்து கொடுத்துள்ளார். 

 

இவர்களுக்கு அரசின் மூலம் வழங்கப்படும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உட்பட அனைத்து சான்றுகளையும் முன்னின்று கிடைப்பதற்கு உதவி செய்து வருகிறார். இந்த இரு இன மக்களும் தங்களுக்கு எனச் சேமித்து வைக்க முடியாதவர்கள். அன்றாடப் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தங்கள் வாழ்க்கையே நகர்த்திச் செல்பவர்கள். தற்போது கரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக அவர்கள் வெளியூர் சென்று தொழில் செய்து பிழைப்பிற்கு வழியில்லாமல் முடக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இந்த நிலையை அறிந்த பெரம்பலூர் சத்யசாய் சேவா சங்க நிறுவனத்தை நடத்தி வரும் ஜெயலட்சுமி சாய்ராம் மற்றும் ரமேஷ் சாய்ராமும் இந்த குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 5 கிலோ அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பைத் தயார் செய்து, நரிக்குறவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் முன்னிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்குக் கொடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்