நாகையில் நடைபெறும் கவர்னர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு அழைப்புக் கொடுத்திருக்கும் நிலையில் புறக்கணித்திருக்கிறார் நாகை எம்எல்ஏ தமிமுன்அன்சாரி.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அவரின் வருகைக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
அவரது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நாகை சட்டமன்ற உறுப்பினருக்கும் அழைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கவர்னர் கலந்துகொள்ளும் நிகழ்வில் தான் கலந்துகொள்ளமாட்டேன், புறக்கணிக்கிறேன் என கூறியிருக்கிறார் நாகை எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி.
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், நாகை எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி கூறுகையில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசுக்கு எதிராக போட்டியாக இரட்டை நிர்வாகத்தை உருவாக்கும் போக்கை கவர்னர் பின்பற்றி வருவது கூட்டாச்சி தத்துவத்திற்கும் மாநில சுயாட்சிக்கும் எதிரானது.
அந்த வகையில், கவர்னரின் தன்னிச்சை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் கவர்னர் உறையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தேன். கவர்னன் தனது அதிகார எல்லைகளுக்குள் இருந்து கொண்டு மரபுகளை பின்பற்றி செயல்பட வேண்டும். இது போல் நடந்து கொள்ளக் கூடாது." என்றார்.
- க.செல்வகுமார்