கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அரசு பள்ளிக்குச் செல்லும் சாலையின் இரண்டு புறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு மலை போல் குவிந்துள்ளது. மேலும், ஒரு பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைக்கும் நிகழ்வும் ஏற்படுகிறது.
இந்த நிலையில் கரூர் மாநகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் நூற்றுக்கணக்கான கண்ணாடி பாட்டில்கள் சாக்கு மூட்டையில் நிரப்பி அந்தக் குப்பை மேட்டில் தூக்கி வீசப்பட்டுள்ளது. மேலும், அந்தத் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளின் விபரங்கள் அடங்கிய ஸ்கேன் சென்டர் சீட்டுகளும் சிதறிக் கிடந்தன.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்த போது, மருத்துவமனை நிர்வாகம் நேரில் வந்து பேசுங்கள் என்று அலட்சியமாகப் பதில் அளித்ததாகக் குற்றம் சாட்டினர். மாநகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது என அறிவிப்பு பலகை வைத்திருந்தும், அதை மதிக்காமல் தனியார் மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனை கழிவுகளை வீசி சென்றதால், அவ்வழியாக செல்லக்கூடிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், குடியிருப்பு பகுதி பொது மக்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.