தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அறவழியில் இன்று (25.05.2018) முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிவசங்கர்,
தமிழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமும் இன்றைக்கு சீர்குலைந்த நிலையில் இருக்கிறது. அதில் கடைசி செயலாக தூத்துக்குடி துப்பாக்கி சூடு அமைந்திருக்கிறது. 100 நாட்கள் போராடிய மக்களை சமாதானபடுத்த அரசும் முன்வரவில்லை. அரசு அதிகாரிகளும் முன்வரவில்லை. போராட்டகளத்தில் எவ்வளவு பேர் திரளுவார்கள் என்பதை அரசும் அறிந்திருந்தது, காவல் துறையும் அறிந்திருந்தது.
அவர்களை தடுத்து நிறுத்துவதை விடுத்துவிட்டு, அவர்களை தாக்கி கொலை செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு இருக்கிறார்கள். அதற்காக தனித்த அடையாளத்தோடு ஒரு துப்பாக்கி சூடு குழு தயார் செய்யப்பட்டுள்ளது. எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் துப்பாக்கி சூடை தொடங்கி இருக்கிறார்கள். துப்பாக்கி சூடு நிகழ்த்துவதற்கு முன்பாக தண்ணீர் பீச்சி அடித்தல், அறிவிப்பு என செய்ய வேண்டிய எந்த நடைமுறைகளையும் பின்பற்றாமல், முட்டிக்கு கீழே சுடாமல் நேரடியாக காவல் துறை வாகனத்தின் மீது நின்று கொண்டு குறி வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள் அந்த 11 பேரும்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்து எதிர்ப்பை தெரிவித்த இருந்த நிலையிலும், எல்லா எதிர்கட்சி தலைவரும் மக்களும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்திருந்த பிறகும், அடுத்த நாளும் துப்பாக்கி சூடை நடத்தி அங்கே ஒருவரை கொன்று இருக்கிறார்கள்.
ஒரு தனியார் நிறுவனத்திற்கு கைக்கூலியாக மாநில அரசும் மத்திய அரசும் பணிபுரிவதை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தாங்கள் கைக்கூலியாக பணிபுரிவதை காவல் துறை துப்பாக்கி சூட்டின் மூலம் மிக வெளிப்படையாக இன்றைக்கு தெரிவித்து இருக்கிறார்கள். வாக்களித்து தேர்ந்தெடுத்த பொதுமக்களுக்கு சேவனாக இருக்க வேண்டிய அரசு, ஒரு தனியார் முதலாளிக்கு ஊழியம் செய்கின்ற பணியாளனாக இருப்பது மிக கேவலமான நிகழ்வு.
அதனால் இதனை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டித்திற்கு திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பாக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு கொடுத்திருந்தார். அதன்படி இன்று முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நேற்றைக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் சென்று இதுகுறித்து வலியுறுத்த சென்றபோது ஸ்டாலினை அங்கிருந்து அகற்றி கைது செய்து இருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழகத்தையும் சீர்குலைத்திருக்கிற இந்த அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வேண்டும் என்ற அவரது கோரிக்கையை ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வாக உணர வேண்டும் என்பதை இந்த இடத்தில் வலியுறுத்திகிறோம். இவ்வாறு கூறினார்.