மாணவிகளுக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ்.: தனியார் கல்லூரி முதல்வர் பணி நீக்கம்
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், வளையக்காரனூரில் எஸ்.எஸ்.எம். என்ற தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் கல்லூரியில் குமார் சார்லிபால் என்பவர் முதல்வராக பணியாற்றி வருகிறார்.
இவர், கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாசமாக எஸ்.எம்.எஸ்.(குறுஞ்செய்தி) அனுப்பியதாக சில மாணவிகளால் புகார் கூறப்பட்டது.
இதையரித்த கல்லூரி மாணவர்கள் ஆத்திரம் அடைந்து நேற்று காலை கல்லூரி வளாகத்தில் நின்ற முதல்வர் குமார் சார்லிபால் காரின் கண்ணாடியை உடைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாணவர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து கல்லூரி முன்பு சாலைமறியல் செய்ய முயன்றனர். இதை அறிந்து குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களை சாலைமறியலை கைவிடுமாறு கூறி மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
அப்போது இன்ஸ்பெக்டர் வேலுதேவன் கூறுகையில், கல்லூரி பிரச்சினை குறித்து நிர்வாகத்திடம் பேசி தீர்வு காணவேண்டும் என்றும், சாலைமறியல் செய்து சட்டம்-ஒழுங்கை கெடுக்கும் வகையில் செயல்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் கூறினார்.
இதன் பின்னர் இதுகுறித்து மாணவ, மாணவிகள் தரப்பில் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கல்லூரி முதல்வர் குமார் சார்லிபால் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்றும், கல்லூரிக்கு நேற்று முதல் வருகிற 27-ந் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது என்றும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையொட்டி மாணவ, மாணவிகள் கல்லூரியை விட்டு கலைந்து சென்றனர். பிரச்சனை முடியும் வரையில் குமாரபாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சிவசுப்பிரமணியம்