அரியலூரில் இருந்து அம்மன் என்ற தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பெரம்பலூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. சேலத்திலிருந்து சிமெண்ட் ஆலைக்கு சாம்பல் ஏற்றிக்கொண்டு பெரிய டேங்கர் லாரி அரியலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியும் பஸ்ஸும் குன்னம் அடுத்த ஒதியம் என்ற இடத்தில் இரண்டும் ஒன்றோடு ஒன்று உரசியது. இதில் பஸ் தன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள 15 அடிபள்ளத்தில் உருண்டு தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் பயணம் செய்த கை குழந்தைகள், சிறுவர்கள், பள்ளி பிள்ளைகள், பெரியவர்கள், பெண்கள் உட்பட 70 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமுற்றனர். இதில் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் 14 வயது ஆர்யா என்ற பள்ளி மாணவர் பலத்த அடிபட்டு இருந்தது. இவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
அடிபட்டு காயமுற்ற மற்ற பயணிகளை பெரம்பலூர் மற்றும் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர். பஸ்சும் லாரியும் மிக அதிவேகத்தில் எதிரெதிராக வந்துள்ளது. இதில் லாரியும் பஸ்ஸும் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று உரசியதே விபத்துக்கு காரணம் என்கிறார்கள் பஸ்சில் பயணம் செய்த பொதுமக்கள்.
சமீபத்தில்தான் இதே பகுதியில் தனியார் கல்லூரி பேருந்துகள் அதிகமாக ஒன்றையொன்று முந்திச் செல்லும் போது விபத்து ஏற்பட்டு பல மாணவ-மாணவிகள் படு காயமுற்றனர். அடுத்து சாலையோரம் பள்ளிக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்திருந்த மாணவர்கள் மீது லாரி மோதி 2 மாணவர்கள் படுகாயமுற்றனர். இப்போது இந்த விபத்து அதிவேகமாக செல்லும் வாகனங்களை அவ்வப்போது போக்குவரத்துதுறையும், காவல்துறையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இனியாவது இதுபோன்ற விபத்துக்கள் நேராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள்.
சம்பவத்தை கேள்விப்பட்டு அக்கம்பக்கத்து கிராமங்களில் உள்ள மக்கள் ஓடி வந்து உதவி செய்தனர். சம்பவம் கேள்விப்பட்டவுடன் குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன், மாவட்ட திமுக சேர்மன் ராஜேந்திரன், வேப்பூர் ஒன்றிய சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை ஆகியோர்காயமுற்ற பயணிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
அதி வேகம் ஆபத்து மித வேகம் மிக நன்று என்பதை இதுபோன்று கனரக வாகனம் ஓட்டும் ஓட்டுனர்கள் கவனத்தில் கொள்வதில்லை விபத்தை தடுத்து மனிதர்களை காக்க வேண்டும் அரசும் அதிகாரிகளும் முன்வர வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள்.