சேலத்தில், நீதிமன்றத்திலேயே கொலை வழக்கு கைதி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (32) கொலை வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 22, 2019) காலை அவரை விசாரணைக்காக சேலம் 6வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது அவர் திடீரென்று பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு விழுந்தார். அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த காவல்துறையினர் சவுந்தர்ராஜனை மீட்டு, உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறையில் கஞ்சா வைத்திருப்பதாகவும், செல்போன் வைத்திருப்பதாகவும் கூறி காவல்துறையினர் அடித்து துன்புறுத்துவதால் தற்கொலைக்கு முயன்றதாக அவர் கூறினார். இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே கைதி சவுந்தர்ராஜன் குறித்து சில பரபரப்பு தகவல்களும் கிடைத்துள்ளன. இவர் கொலை வழக்கு ஒன்றில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பின்னர் அங்கிருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த அவர், நங்கவள்ளி பகுதியில் ஒரு பெண்ணைக் கொன்று நகை பறித்த வழக்கில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இவர் சிறையில் சுகபோகமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கமாக சிறைக்குச் செல்பவர்கள் செருப்பு அணிந்து செல்லவே அனுமதி உண்டு. ஆனால் சவுந்தர்ராஜன், சிறையில் இருந்து வெளியே வந்தபோது ஷூ அணிந்து வந்தார். அந்த ஷூவுக்குள்தான் பிளேடை மறைத்து எடுத்து வந்துள்ளார்.
நீதிபதியிடம், தனக்கு சிறைக்குள் அடிப்படை வசதிகள் எதுவுமே செய்து தருவதில்லை என்று கூறிய சவுந்தர்ராஜன், திடீரென்று பிளேடால் கைகளையும், கழுத்தையும் அறுத்துக்கொண்டு தற்கொலை நாடகமாடியதும் தெரிய வந்தது.