சேலம் மத்தியச் சிறையில் கொலை வழக்கில் அடைக்கப்பட்டுள்ள குண்டாஸ் கைதிகள் இருவர், வார்டனை சரமாரியாகத் தாக்கிய சம்பவத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கோவை சரவணம்பட்டி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சிவா என்கிற பாபு, அமர்நாத் ஆகியோர் உள்பட பத்து பேர் கைது செய்யப்பட்டு, கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். விசாரணையில் ஏற்கனவே இவர்கள் சில குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலுக்கு எதிர் தரப்பைச் சேர்ந்த கோஷ்டியும் இதே சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இதனால் சிறைக்குள்ளேயே இரு கோஷ்டிகளுக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து சிவா, அமர்நாத் உள்ளிட்ட 10 பேரையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சேலம் மத்தியச் சிறைக்கு மாற்றினர். சேலம் சிறைக்கு மாற்றப்பட்ட பிறகும் இவர்களின் கொட்டம் அடங்கவில்லை. சிறைக்குள் செல்போன் பயன்படுத்தியதாக அவர்கள் மீது புகார்கள் எழுந்தன. அவர்களை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர், சிவா தரப்பினரிடம் அடிக்கடி திடீர் சோதனைகளை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சிறை வார்டன் கார்த்திக் என்பவர், சிவா கோஷ்டியிடம் இருந்து ஒரு செல்போனை பறிமுதல் செய்துள்ளார். சிறை நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் அஸ்தம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் சிவா தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதில் இருந்தே சிறை வார்டன் கார்த்திக் மீது ரவுடி சிவா தரப்பினர் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர். கடந்த திங்கள்கிழமை (ஏப். 18) வார்டன் கார்த்திக்கை, சிவா தரப்பினர் பல் துலக்கும் பிரஷ்ஷை கம்பி போல கூர்மையாக்கி அவரை சரமாரியாக குத்தியுள்ளனர். கார்த்திக்கின் அலறல் சத்தம் கேட்டு, பணியில் இருந்த மற்ற காவலர்கள் நிகழ்விடம் ஓடிவந்து, அவரை மீட்டனர். சேலம் மத்தியச் சிறை நிர்வாகம் இச்சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் சிவா தரப்பு மீது புகார் அளித்துள்ளது.
காவல்துறையினர் ரவுடி சிவா தரப்பு மீது கொலை மிரட்டல், அரசுப்பணியை செய்ய விடாமல் தடுத்தல், காயம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறையினர் மத்தியச் சிறைக்கு சென்று ரவுடிகள் சிவா, அமர்நாத் ஆகியோரிடம் நேரில் விசாரணை நடத்தினர். இவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்ததால் வார்டன் கார்த்திக் மீது அவர்கள் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். அந்த சம்பவத்தில் இருந்து சிவா தரப்பினர் அடைக்கப்பட்டுள்ள பகுதிக்கு கார்த்திக் போகும்போதும் வரும்போதும் தொடர்ந்து கேலி, கிண்டல் செய்துள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ரவுடிகள் அவரை தாக்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து சிவா, அமர்நாத் ஆகிய இருவரையும் வார்டனை தாக்கிய வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிவா கோஷ்டியைச் சேர்ந்த ரவுடிகளை தனித்தனி செல்களில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களை கடலூர், பாளையங்கோட்டை, மதுரை சிறைகளில் தனித்தனியாக பிரித்து அனுப்பி, அடைத்து வைக்கவும் சிறைத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கைதிகளால் வார்டன் தாக்கப்பட்ட சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.