இந்தியாவில் உள்ள 41 படைகலன் தொழிற்சாலைகளை 7 கார்ப்பரேஷன் நிறுவனமாக (தனியார் மயம்) மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்று அந்நிறுவனத்தின் தொழிற்சங்கத்தினரும், எதிர்க்கட்சியினரும் எச்சரித்து வந்தனர். ஆனால், அந்த எதிர்ப்பையும் மீறி திருச்சி நவல்பட்டில் உள்ள இலகுரக ஆயுதங்களை தயாரிக்கும் ஓ.எஃப்.பி. என்ற துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்புத்துறை நிறுவனம் தற்போது கார்ப்பரேஷனாக மாற்றம் செய்யப்பட்டு ‘அட்வான்ஸ்ட் வெப்பன்ஸ் அன்ட் எக்யூப்மென்ட் இந்தியா லிமிடெட்’ என்ற பெயரில் அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில் கார்ப்பரேஷனாக மாற்றப்பட்ட நிறுவனத்தின் அர்ப்பணிப்பு மற்றும் துவக்க விழா இன்று நடைபெற்றது. இதனை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்.
இதேபோல் திருச்சியில் இயங்கி வரும் மற்றொரு பாதுகாப்புத் துறை நிறுவனமான எச்.இ.பி.எஃப் கார்ப்பரேஷனாக்கப்பட்டு ‘முனிசன்ஸ் இந்தியா லிமிடெட்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கார்ப்பரேஷனாக மாற்றப்பட்ட எச்.இ.பி.எஃப் நிறுவனத்தின் துவக்கவிழாவானது எச்.இ.பி.எஃப் தொழிற்சாலை வளாகத்தில் ஆய்வு மாளிகையில் நடைபெற்றது. இதனையும் மோடி காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்து நிறுவனங்களின் இயக்குநர்கள் உள்பட உயர் அதிகாரிகள் அனைவரோடும் கலந்துரையாடினார்.