Skip to main content

பிரதமரின் தமிழக வருகை? பாதுகாப்பு பணிகள் தீவிரம்

Published on 28/10/2022 | Edited on 28/10/2022

 

Prime Minister attending graduation ceremony Gandhigram University

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி அருகே இருக்கும் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு 55 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 

தமிழகத்தில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் தனிப்பெருமை வாய்ந்தது. இப்பல்கலைக்கழகத்தில் கடந்த 50 வருடங்களாக இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களே பல்கலைக்கழகத்தின் வேந்தராக பதவி வகித்து வந்துள்ளனர். இதற்கு முன்பு கடந்த 2019 ஆம் வருடம் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற்ற 35வது பட்டமளிப்பு விழாவில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கரியன் நிசாந்த் கலந்து கொண்டு மாணவ - மாணவியருக்குப் பட்டங்களை வழங்கினார். அதன்பின்பு பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. 

 

இதனைத்தொடர்ந்து வரும் நவம்பர் 11 ஆம் தேதி நடைபெற உள்ள 36 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்குவதுடன் 55 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால், பல்கலைக்கழகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகவில்லை. 

 

Prime Minister attending graduation ceremony Gandhigram University

 

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் காந்திகிராமம் அருகே ஹெலிகாப்டர் இறங்கும் தளம் மற்றும் பிரதமர் கலந்துகொள்ள உள்ள பட்டமளிப்பு விழா அரங்கம் உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்று பாதைகளை ஆய்வு செய்து பாதுகாப்புப் பணிகளையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கோட்டாட்சியர் பிரேம்குமார், வட்டாட்சியர்கள் சரவணன், தனுஷ்கோடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, ஏழுமலையான், அம்பாத்துரை காவல் ஆய்வாளர் வெங்கடாசலம், தலைமை நில அளவர் அருண்பாண்டியன், கிராம நிர்வாக அலுவலர்கள் விஜயலட்சுமி, ராஜலட்சுமி, விஜய்ஆனந்த் உட்பட பலர் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்