Skip to main content

குடியரசுத் தலைவர் தேர்தல்... தமிழக முதல்வர் வாக்களிப்பு!

Published on 18/07/2022 | Edited on 18/07/2022

 

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24- ஆம் தேதியுடன் நிறைவடைவதால், அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று (18/07/2022) நடைபெற்று வருகிறது. ஆளும் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்முவும், காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.

 

இன்று வாக்குப்பதிவுக்காக, டெல்லியில் உள்ள நாடாளுமன்றம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்றங்களிலும் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்து குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய உள்ள நிலையில் கரோனாவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில் தலைமைச் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மையத்தில் வாக்களித்தார்.

 

திமுக கூட்டணி சார்பில் 159 பேர் வாக்களிக்க உள்ளனர். அதில் திமுகவினர் மட்டும் 132  மற்றும் ஒரு சபாநாயகர். அதிமுக கூட்டணியில் 75 பேர் வாக்களிக்க உள்ளனர். மாலை ஐந்து மணிவரை இந்த தேர்தல் நடைபெற இருக்கிறது. 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு 176 வாக்கு மதிப்பும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 700 வாக்கு மதிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. மாலை இந்த வாக்குப்பெட்டிகள் விமானம்மூலம் பலத்த பாதுகாப்புடன் டெல்லி அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்