Skip to main content

‘பரம்பூர் பாசனதாரர் சங்கத்துக்கு தேசிய விருது’ - அக்டோபர் 22இல் குடியரசுத் தலைவர் வழங்குகிறார்!

Published on 20/10/2024 | Edited on 20/10/2024

 

தண்ணீரை நீர்நிலைகளில் சேமித்து, சேமித்த தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்திப் பயனடைவதை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய அரசு, மாநில, மாவட்ட, நிறுவனங்கள், விவசாயம் எனப் பல பிரிவுகளில் பல்வேறு தேர்வுகள் செய்து விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அருகில் உள்ள பரம்பூர் பெரிய கண்மாய் நீரினைப்பயன்படுத்துவோர் சங்கம் மத்திய அரசு விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (22ஆம் தேதி) குடியரசுத் தலைவரிடம் இந்த விருதைப் பெற உள்ளனர்.

இது குறித்து பரம்பூர் விவசாயிகள் கூறும் போது,  “பரம்பூர் பெரிய கண்மாய் 165 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பாசனப் பரப்பளவு 268 ஏக்கர். சிறு விவசாயி, பெரு விவசாயி என எந்த பாகுபாடும் இல்லாமல் தேவைக்கு ஏற்ப வரிசைப்படி தண்ணீர் பாய்ச்சப்படும். கடந்த 1978ஆம் ஆண்டு பாசனதாரர் சங்கம் உருவாக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு அரசு சட்ட விதிகளுக்கு உட்பட்டு சங்கம் செயல்பட்டு வருகிறது. 281 உறுப்பினர்கள் இதில் உள்ளனர். அதில் 40 பெண் விவசாய உறுப்பினர்கள் உள்ளனர். முறைப்படி ஐந்தரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கப் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடத்தி பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தற்போது பொன்னையா தலைவராக உள்ளார்.

இந்த பாசன சங்கத்தின் விவசாயிகள் தங்கள் வயலில் ஒரே நேரத்தில் நடவு செய்வது தொடர்ந்து தண்ணீர் பாய்ச்ச, மருந்து தெளிக்க என்று சங்கத்தின் மூலம் 4 விவசாயிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். யாருடைய வயலுக்குத் தண்ணீர் தேவை என்பதை இவர்களே பார்த்துப் பாய்ச்சுவார்கள். இதனால் தண்ணீர் பாய்ச்சுவதில் எந்த பிரச்சனையும் வந்துவிடாது. அதே போல கண்மாய் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதால் 2 முறை நடவு செய்து அறுவடை செய்யப்படுகிறது. அறுவடை செய்யும் சுமார் 1200 டன் நெல்லையும் பரம்பூரிலேயே விவசாயச் சங்க அலுவலகம் அருகில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வரிசைப்படி விற்பனை செய்யப்படும். இதற்காக எந்த கமிசனும் வசூலிக்கப்படுவது இல்லை. விவசாயிகள் நலனுக்காக டோக்கன் முன்பதிவைச் சங்கத்தின் மூலமே கட்டணமின்றி செய்து கொடுக்கப்படுகிறது.

இவை அத்தனையும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. அதாவது சங்க அலுவலகம், நெல் கொள்முதல் நிலையம், கண்மாய் மடை, தண்ணீர் செல்லும் வழித்தடம் ஆகியவை கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பாகச் செயல்படும் பரம்பூர் பெரிய கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்திற்கு மத்திய அரசு விருது கிடைத்திருப்பது பெருமையாக உள்ளது” என்கின்றனர் விவசாயிகள். 

சார்ந்த செய்திகள்