ஆய்வுப் பணி என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விசிட் அடித்து வருகிறார் தமிழக கவர்னர் புரோகித். இது மாநில உரிமையை பறிக்கும் செயல் என கவர்னர் செல்லுமிடங்களெல்லாம் தி.மு.க.வினர் கருப்பு கொடி காட்டி கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் நாமக்கல் கவர்னர் வந்தபோது தி.மு.க.வினர் கருப்பு கொடி காட்டி கண்டன கோஷம் எழுப்பினார்கள். ஒரு கருப்பு கொடி சாலையில் வீசப்பட்டது.
தி.மு.க.வினரின் எதிர்ப்பு போராட்டம் கவர்னர் புரோகித்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதன் விளைவாக போலீசார் தி.மு.க.வினர் 300 பேரை கைது செய்து ஜாமீனில் வெளிவராத பிரிவின்படி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 15 நாட்களுக்குப் பிறகு தான் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.
தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அக்கட்சியின் செயல் தலைவரான மு.க.ஸ்டாலின் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்திய கோடு இனி கவர்னர் அடுத்து எந்த மாவட்த்திற்கு சென்றாலும் நானே நேரில் சென்று கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துவேன் என அறிவித்தார்.
இந்த நிலையில் கவர்னரின் அடுத்த ஆய்வுப் பணி ஈரோடு மாவட்டம் என கூறப்பட்டிருக்கிறது. ஜுலை 6ந் தேதி கவர்னர் ஈரோடு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக தயாரான ஈரோடு தி.மு.க.வினர் மற்ற மாவட்டத்தில் நடந்த கருப்பு கொடி போராட்டத்தை விட மாபெரும் போராட்டமாக இதை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக தான் பத்தாயிரம் கருப்பு கொடிகளை தயார் செய்து வைத்துள்ளார்கள் ஈரோடு தி.மு.க.வினர். இதற்கிடையே கவர்னர் ஈரோடு வருகை தேதி மாற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்