தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பிரச்சாரம், பரப்புரை உள்ளிட்ட பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக இயங்கிவருவதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவும் தேர்தல் பிரச்சாரம், வேட்புமனு தாக்கல் என இயங்கி வருகிறது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அமமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. அதன்படி 60 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் 2006இல் விஜயகாந்த் தனித்து நின்று வென்ற விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட தற்போது மனுதாக்கல் செய்துள்ளார். இன்று (18.03.2021) பிரேமலதா விஜயகாந்தின் 52வது பிறந்தநாள் என்ற நிலையில், பிறந்தநாள் அன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ''கிராமங்கள் வரை கிளை கழகங்கள் அமைந்துள்ள கட்சி தேமுதிக. 243 தொகுதிகளிலும் தேமுதிக பலமாக உள்ளது'' என்றார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர் உங்கள் பரப்புரையில் கூட்டம் அதிகம் கூடவில்லையே தேமுதிகவுக்கு எழுச்சி இல்லையா என கேள்வியெழுப்ப, ''மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவில் நீங்கள் பார்ப்பீர்கள்'' என்றார்.