"உனது கணவரின் ஆத்மா சாந்தியடையவில்லை. உடனடியாக அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்." என பித்தலாட்ட கதைகள் கூறி விதவைப் பெண்ணிடம் தங்கத் தாலி மற்றும் பணம் பறித்த கிளுகிளு சாமியாரை கைது செய்துள்ளனர் விளாத்திக்குளம் துணைச்சரகப் போலீசார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் துணைச்சரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் கணேசனின் மகனான சக்தி. இவர், விளாத்திக்குளம் டு நாகலாபுரம் செல்லும் வழியில் 'சக்தி வராகி' எனும் பெயரில் ஜோதிட நிலையம் ஒன்றை அமைத்துக்கொண்டு, மாந்தீரீக குறி கூறிவந்துள்ளார். அவ்வப்போது உலக நன்மைக்காக எனும் பெயரில் அண்டா பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி வைத்து, அதில் கோடுகளை வரைந்து தியானத்தில் இருப்பதாக காண்பித்து விளம்பரம் செய்துவந்ததால், மக்கள் மத்தியில் மிகப்பிரபலமான சாமியார் ஆனார். இதனையே தனது தொழிலுக்கான மூலதனமாக்கி "பிரிந்தவர்கள் சேர வேண்டுமா..? வேலை கிடைக்கவில்லையா.? பொருளாதார பிரச்சனையா.?" என மக்களின் அடிப்படை பிரச்சனைகளைப் பற்றி 'குறி' கூறி முகநூல் பக்கத்தில் நேரலை செய்து, பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார். இதனிடையே, "உனது கணவர் உன்னுடன் இருக்கவில்லையா..?" என பெண்கள் வட்டத்திலும் பேசி நெருக்கமானது குறிப்பிடத்தக்கது.
இது இப்படியிருக்க, அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த விதவைப் பெண்மணி ஒருவர் “தொட்டது துலங்கவில்லை.! மனசே சரியில்லை!" என இவரிடம் 'குறி' கேட்க, வழக்கமான பித்தலாட்ட வேலைகளை ஆரம்பித்த சாமியார், "இறந்த உனது கணவனின் ஆத்மா சாந்தியடையவில்லை. இப்போது நீ குடியிருக்கும் வீட்டை இடித்து மாற்றியமைத்தால்தான் உன் கணவர் ஆத்மா சாந்தியடையும், உனது குடும்பப் பிரச்சனை தீரும்" என்று கூற, அந்த பெண்ணோ, "தன்னிடம் பணம் இல்லை" என்று கூற, அந்தப் பெண்ணிடமிருந்து 2½ பவுன் தங்கச் செயினைப் பெற்றுக்கொண்டு, ரூபாய் 30,000 கொடுத்து சாமியாரே, வீட்டை இடித்து வாஸ்து படி (.?) கட்டியிருக்கிறார். இதற்கடுத்த மாதங்களில், "குடும்ப பிரச்சனை தீரவில்லை" என மீண்டும் அந்தப் பெண் அழுது புலம்ப, "உனது தங்கத் தாலி, தங்க மோதிரம் இவற்றை உருக்கிக் கொண்டு வா.! அதனை தாயத்தாக மாற்றி உனக்கு தருகின்றேன். அதற்குக் கட்டணம் 3,000 ரூபாய் எனக் கூற, அதனையும் செய்திருக்கிறார் அந்தப் பெண்மணி. அப்போதும் பிரச்சனை தீரவில்லை என்பதால், தான் ஏமாந்ததை அறிந்தவர் "நான் கொடுத்த தாலி, மோதிரம் பணத்தைக் கொடு.!" என சாமியாரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர், "மரியாதையாக ஓடிவிடு.! இல்லையெனில் கால், கை விளங்காமல் செய்துவிடுவேன்" என மிரட்டிய நிலையில் விளாத்திக்குளம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார் அந்தப் பெண்மணி.
புகார் குறித்து அறிந்த தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விளாத்திக்குளம் டி.எஸ்.பி. பிரகாஷ் உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் விளாத்திக்குளம் டி.எஸ்.பி. மேற்பார்வையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு சாமியார் சக்தியை கைது செய்தனர். மேலும், இதுபோன்று எத்தனை பேரை மோசடி செய்துள்ளார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதனிடையில், இதுபோன்று போலி சாமியார்களை நம்பி ஏமாற வேண்டாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
படங்கள்: விவேக்