தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பி.ஆர்.எஸ் கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ், கடந்த 8 ஆம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் தனது வீட்டின் குளியலறைக்குச் சென்ற போது வழுக்கி விழுந்துள்ளார். பின்பு வலியால் துடித்த அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். பின்னர் அவருக்கு இடது கால் எலும்பு முறிவு, ஏற்பட்டதை அடுத்து சந்திரசேகர ராவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சந்திரசேகர் ராவை நேரில் சென்று நலம் விசாரித்தார். இதேபோன்று ஆந்திரமாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்த கடந்த 10 ஆண்டுகளாக சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சி ஆட்சி செய்து வந்தது. இதனைத் தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியை தோற்கடித்து முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.