தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கிக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று இரவு முதல் இடைவிடாது மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் குளம் போல மழை நீர் தேங்கியுள்ளது.
இன்னும் ஐந்து நாட்களுக்குப் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கும் நிலையில் சென்னை அடையாற்றில் பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பருவமழையின் காரணமாக ஆங்காங்கு மரங்கள் விழுந்ததில் மின்சார ஒயர்கள் அறுபட்டதால் சில இடங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இருந்த போதும் மாநகராட்சி ஊழியர்கள் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் மின் விநியோகம் எங்கும் பாதிக்கப்படாது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முதல்வரின் வழிகாட்டுதல் படி ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு மழையால் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டு இந்த ஆண்டு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. துணை மின் நிலையங்களில் உள்ள மின்மாற்றிகள் 1 மீட்டர் உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையைப் பொறுத்தவரை பகலில் 1440 பேர் பணியிலும், இரவில் 600 பேர் பணியிலும் இருந்து பணியாற்றி வருகின்றனர். மழை பெய்தாலும் எல்லாப் பகுதிகளிலும் 100% மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் அலுவலர்கள் தயார் நிலையில்தான் உள்ளனர். எந்த இடத்திலும் பாதிப்பு இல்லாத அளவிற்குச் சீரான மின்விநியோகம் கொடுக்கப்படுகிறது. சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்தாலும் மின் விநியோகத்தில் எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாது. சிறு பாதிப்பு என்றாலும் கூட உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளனர். மேலும் மழைக்காலம் என்பதால் மின் தேவைகள் குறைந்துள்ளது.” எனக் கூறினார்.