டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது, "அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஹிந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்" எனப் பேசியிருந்தார்.
மத்திய உள்துறை அமைச்சரின் இத்தகைய கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கவிதை நடையில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில்,
'வடக்கே வாழப்போன தமிழர்
இந்தி கற்கலாம்
தெற்கே வாழவரும் வடவர்
தமிழ் கற்கலாம்
மொழி என்பது
தேவை சார்ந்ததே தவிர
திணிப்பு சார்ந்ததல்ல
வடமொழி ஆதிக்கத்தால்
நாங்கள் இழந்த நிலவியலும் வாழ்வியலும் அதிகம்
இதற்குமேலும் இந்தியா?
தாங்குமா இந்தியா?' எனத் தெரிவித்துள்ளார்.