தமிழ்நாட்டில் மின்துறையின் அலட்சியத்தால் அடுத்தடுத்து பல உயிர்கள் பலியாகி உள்ளது. இதில் மின் வாரிய ஊழியர்களின் உயிர்களும் பறிபோகியுள்ளது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் தாழ்வாக சென்ற மின்கம்பியில் தனியார் பேருந்து உரசியதால் 4 உயிர்கள் பறிபோனது நேற்று.
அந்தச் சோகம் மறைவதற்குள் இன்று அதே தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் அருகில் உள்ள கல்யாணஓடை கிராமத்தில் தண்ணீர் செல்லும் மறவக்காடு வாய்காலை கடக்க பழைய மின்கம்பமே பாலமாக உள்ளது. அதே ஊரைச் சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளி மாரியப்பன் - முத்துலெட்சுமி தம்பதிகள். இவர்களது மகன்கள் தினேஷ் (12), கௌதம் (10) ஆகிய இருவரும் இந்த மின்கம்ப பாலத்தில் ஏறிக்கடக்க முயன்றபோது மின்கம்ப பாலத்திற்கு மேலே தண்ணீர் சென்றுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பி தண்ணீரில் கிடந்ததால் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இக்கரையில் இருந்து அக்கரைக்குச் செல்ல ஒருவர் பின் ஒருவராக செல்லும் பேது அடுத்தடுத்து மின்சாரம்தாக்கி தினேஷ் மற்றும் கௌதம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மின்கம்பி அறுந்து கிடப்பதை மின்வாரியத்திற்கு தகவல் சொன்ன பிறகும் மின்சாரத்தை துண்டிக்காததால் தான் இந்த இரு பிஞ்சுகளையும் இழந்து நிற்கிறது அந்தக் குடும்பம். குழந்தைகளின் சடலங்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்வாரிய அலுவலர்கள் மீது மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆனாலும் மின்வாரிய அலட்சியத்தால் இப்படி பல உயிர்கள் போகிறதே என்ற நமது கேள்விக்கு, ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி கூறும் போது, ''மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் உடனே பியூஸ் போகனும். ஆனால் அடிக்கடி பியூஸ் போகிறது என்று கனமாக பியூஸ் போட்டு வைத்துவிடுகிறார்கள். மேலும் மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் உடனே மின்சாரத்தை நிறுத்திவிட்டு சம்பவ இடத்திற்கு சென்று சீரமைப்பு பணி செய்ய வேண்டும். ஆனால் மின்வாரிய அலுவலகங்களில் ஊழியர் பற்றாக்குறை அதிகம். அதாவது பல கிராமங்களை ஒருவரே கவனிக்க வேண்டியுள்ளதால் சரியான நேரத்திற்கு பாதிப்பு ஏற்படும் இடங்களுக்கு போக முடிவதில்லை. மொத்தத்தில் ஒப்பந்த ஊழியர்களை வைத்தே பணிகள் நடக்கிறது. அதிலும் மின் ஊழியர்களுக்கு அரசாங்கம் கொடுக்க வேண்டிய எந்த பாதுகாப்பு உபகரணங்களும் சரிவர கொடுப்பதில்லை. அதனால் மின் ஊழியர்களும் ஒப்பந்த ஊழியர்களுமே மின்சாரம் தாக்கி இறக்கிறார்கள்.
இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எழில் நகரில் 147 வீடுகளுக்கு மேலே உயரழுத்த மின்கம்பிகள் போகிறது. கடந்த சில வருடங்களில் 6 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பிறகும் கூட அந்த மின்பாதையை மாற்றி அமைக்க முன்வரவில்லை. அந்த நகர் வாசிகள் செலவு செய்யத் தயாராக இருந்தும் கூட மின்பாதையை மாற்றி அமைக்காமல் அலட்சியம் காட்டுகிறார்கள் மின்வாரிய அதிகாரிகள். அடுத்த உயிரை பறிக்கும் முன்பே மின்பாதையை மாற்றிக் கொடுங்கள் என்று மின்வாரியம் முதல் மாவட்ட நிர்வாகம் வரை பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை. இப்போது மழைக்காலம் வேறு. அதனால் பேரிடர் காலங்களில் மின்வாரியம் அலட்சியமாக இல்லாமல் அலார்ட்டாக இருக்க வேண்டும்'' என்றார்.