கன்னியாகுமரியில் ஐயப்ப சீசன் காரணமாக அதிகரித்து வரும் சுற்றப்பயணிகளிடம் போலி பவர்பேங்க் விற்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதுவும் அவர்கள் விற்ற அந்த போலி பவர்பேங்க்கின் உள்ளே எடைக்காக களிமண் நிரப்பப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ஐயப்ப சீசன் என்பதால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அப்படியே கன்னியாகுமரிக்கும் சென்று சுற்றுலா செல்வது வழக்கம். இந்நிலையில் இப்படி சுற்றுலா பயணத்தின் போது கன்னியாகுமரி வந்த ஒரு ஐயப்ப பக்தர் சாலையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் குறைந்த விலையில் விற்கப்பட்டு கொண்டிருந்த பவர்பேங்க்கை வாங்கியுள்ளார். அந்த பவர் பேங்க் மூலம் மொபைலுக்கும் சார்ச் போட்டுள்ளார். மொபைலும் சார்ச்சாகியது. ஆனால் கொஞ்சம் நேரம் கழித்து மொபைல் சார்ச்சாகவில்லை ஆகவே அந்த பவர் பேங்க்கை திறந்து பார்த்துள்ளார். அப்போது உள்ளே ஒரு சிறிய பேட்டரி பொருத்தப்பட்டு எடைக்காக களிமண் வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ந்த அவர் அதனை சமூக வலைதளத்தில் வீடியோவாக பதிவிட்டார்.
இந்த வீடியோ கன்னியாகுமரி போலீசாரின் கவனத்திற்கு செல்ல, இதுதொடர்பாக போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அங்கு பவர் பேங்க் வியாபாரம் செய்துகொண்டிருந்த இருவரை பிடித்து அவர்கள் விற்பனைக்கு வைத்திருத்த பவர் பேங்க்கை ஓபன் செய்து பார்த்தபோது அவை அனைத்தும் களிமண் அடைக்கப்பட்ட போலி பவர்பேங்க் என தெரியவந்தது. இந்த நூதன மோசடியில் கேரளாவை சேர்ந்த சித்திக், பெங்களூருவை சேர்ந்த சபிபுல்லா ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீசார். விற்பனைக்கு வைத்திருந்த நூற்றுக்கணக்கான போலி பவர்பேங்குகள், ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.