
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 9ம் தேதி ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் பலர் திரண்டு வந்து அதிகாரிகளிடம் மனு ஒன்றை கொடுத்தனர். பிறகு அவர்கள் கூறும்போது, "சாலைப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள மினி ஆட்டோ ஓட்டுநர்கள், டூரிஸ்ட் டாக்ஸி, கால் டாக்ஸி, சுற்றுலா வேன், பயணிகள் போக்குவரத்து மற்றும் சிறிய சரக்கு வாகனங்கள், லாரி, பஸ் ஓட்டுனர்கள், ஒர்க் ஷாப் தொழிலில் ஈடுபட்டுள்ள மெக்கானிக்குகள், பெயிண்டர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகன பராமரிப்பாளர்கள், உதிரிப்பாக, விற்பனையாளர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்துனர்கள், மற்றும் அரசு போக்குவரத்து நீங்கலாக சாலை போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் என ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சம் பேர் இத்தொழிலை நம்பியே உள்ளோம்.
தமிழகம் முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் 25 லட்சம் பேர் இத்தகைய தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி இதன் மூலம் கிடைக்கும் வருமானம் தான் எங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. கரோனா தொற்று காரணமாக மத்திய மாநில அரசுகளால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு மூலம் எங்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் வாகன இயக்கம் என்பது இன்னமும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை.
இதற்கு தீர்வு காண வேண்டும். மாநிலத்தில் தனியார் போக்குவரத்து இயக்கப்படும் வாகனங்கள் சிறிய முதலீட்டுடன் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று தான் இயக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் மாதாந்திர கடன் தொகை செலுத்த இயலாத நிலைமையில் நாங்கள் உள்ளோம். எனவே வருகிற டிசம்பர் மாதம் வரை மாதாந்திரத் தவணை தொகையை செலுத்துவதை ஒத்திவைக்க ரிசர்வ் வங்கி அரசிடம் வலியுறுத்த வேண்டும். அரசு அறிவிப்பு செய்ய வேண்டும். பொது போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச்சான்று வருகிற டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும். மோட்டாருக்கு எரிபொருள் நிரப்பினால் தான் இயங்கும் அந்த தொழிலை செய்கிற மனிதர்களான எங்களுக்கும் எங்களின் குடும்பத்தின் பசியை போக்க வேண்டும்” என்றனர்.