சென்னையில் வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்ட பின் இன்று (03/07/2022) செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன், "அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என வைத்திலிங்கம் கூறுகிறார். ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கக் கூடியவர்களுக்கே ஒத்த கருத்து இல்லை. சட்ட விதிகளைப் பின்பற்றி நடைபெறும் பொதுக்குழுவை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. அ.தி.மு.க.வில் தற்போது தலைமைக் கழக நிர்வாகிகள் மட்டுமே உள்ளனர்; ஒருங்கிணைப்பாளர்கள் இல்லை.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும். வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். 23 தீர்மானங்களில் ஒரு சில தீர்மானங்கள் தவிர்த்து பிற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். எடப்பாடி பழனிசாமிக்கு 99% நிர்வாகிகள் ஆதரவு உள்ளது; ஓ.பன்னீர்செல்வத்துக்கு 1% ஆதரவு மட்டுமே உள்ளது" எனத் தெரிவித்தார்.