நெல்லையில் இளைஞரிடம் பூணூல் அறுக்கப்பட்டதாக எழுந்த புகாரில் தற்பொழுது காவல்துறை விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது.
நெல்லை மாநகரின் தியாகராஜன் நகர் பகுதியில் வசித்து வருபவர் சுந்தர். இவருடைய மகன் அகிலேஷ் (27) கடந்த இரண்டு தினத்திற்கு முன்பு ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றிற்காக அகிலேஷ் வீட்டில் இருந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அப்பொழுது வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல் தன்னை அவதூறாக பேசியதோடு, தன்னை தாக்கி தான் அணிந்திருந்த பூணூலை அறுத்ததாக குடும்பத்தினரிடம் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
அகிலேஷ் சொன்னதை கேட்டு அவரது குடும்பத்தார் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பூணூல் அறுக்கப்பட்டதாக கூறப்பட்ட இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. தொடர்ந்து நெல்லை வந்திருந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் தெரிவித்ததோடு, இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் இளைஞர் நடந்து சென்ற பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குறிப்பிட்ட நேரத்தில் அப்படி எந்தவொரு நிகழ்வும் நடைபெறவில்லை, ஆள் நடமாட்டமும் இல்லை என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது பொய்யான புகார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவலை இளைஞர் பரப்பி உள்ளார். அதனைப் பெற்றோர்களிடமும் கூறியிருக்கிறார். பெற்றோர்களும் அதையேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள் என நெல்லை மாநகர காவல்துறை விளக்கமளித்துள்ளது.