பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட மேல்மா நகர்ப் பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இயங்கும் இந்த அரசுப் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் மிகவும் பாழடைந்த நிலையில் பள்ளி வகுப்பறை கட்டிடம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டடத்தின் மேல் தளத்தின் சிமெண்ட் பூச்சுகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்து கம்புகள் தெரிகிறது. மேலும், பல இடங்களில் சிமெண்ட் பூச்சுக்கள் பெயர்ந்து விழுந்து மழை பெய்தால் வகுப்பறைக்குள் மழைநீர் சொட்டும் நிலையில் உள்ளது.
இதனால் மிகவும் பழைமை வாய்ந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய பள்ளிக்கட்டிடம் கட்டித்தர வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் எப்போதும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கல்வி கற்பதாகவும், வகுப்பறையில் அமர்வதற்கு அச்சமாக இருப்பதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.