டெல்லியில் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் “பண்டிகையின்போது பசுமைப் பட்டாசுகள் வெடிப்பதைக்கூட மக்கள் தவிர்த்திட வேண்டும். குழந்தைகளே! உங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள். பட்டாசுகளை வாங்க வேண்டாமென்று. ஒருவேளை பண்டிகையைக் கொண்டாடியே ஆகவேண்டும் என்றால், பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடியுங்கள்.” என்று பேட்டியளித்திட, அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சியின் தலைமை வழிகாட்டியான பொன்ராஜ் “காற்று மாசுக்கு பட்டாசு காரணமல்ல. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் வெளியேற்றப்படும் co2 தான் காரணம். co2-வை பிளாஸ்டிக்காக மாற்றுவதற்கு தொழில்நுட்பம் வந்துவிட்டது. இதுகூட தெரியாமல் பட்டாசைக் குறை சொல்கிறார் அமைச்சர். பாவம் இந்தியா. அதைவிட பாவம் சிவகாசி. இதெல்லாம் நம் தலையெழுத்து. அமைச்சரின் இந்தப் பேட்டியால் சீனாவுக்கு நல்ல வாய்ப்பு. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் 8 லட்சம் தொழிலாளர்களுக்கோ ஆப்பு.” என்று ஜவடேகருக்கு டிவிட்டரில் பதிலடி தந்துள்ளார்.
கார்பன்டை ஆக்ஸைடை கரியமிலவாயு என்பார்கள். நிறமற்ற வாயுவான co2 என்பது கார்பன்டை ஆக்ஸைடின் மூலக்கூறு ஃபார்முலா ஆகும். இது உலர் காற்றைக்காட்டிலும் 60 சதவீதம் அடர்த்தி மிகுந்ததாகும்.
பட்டாசு சமாச்சாரத்தில் பிரகாஷ் ஜவடேகர் போன்ற மத்திய அமைச்சர்களுக்கு பொன்ராஜ் மாதிரியான அறிவியல் ஆலோசகர்கள் வகுப்பு எடுக்க வேண்டிய நிலையில் நம் நாடு இருப்பதாகப் பலரும் முணுமுணுக்கின்றனர்.