தென்னிந்திய ரயில்வேயில் மிகவும் முக்கியமான பனிமனை திருச்சியில் உள்ள பொன்மலை பணிமனை. இந்த பணியில் சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஆண்டுக்கு சுமார் 1,000 ரெயில் பெட்டிகளை பழுதுபார்ப்பது, புதுப்பிப்பது, சரக்கு ரயில்களில் இணைக்கப்படும் வேகன்கள் தயாரித்து கொடுப்பது , டீசல் என்ஜின்களை பரமரிப்பது ஆகிய பணிகள் இங்கு தொடர்ந்து நடைபெறும்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்தியாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பொன்மலை ரெயில்வே பணிமனையும் மூடப்பட்டது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இந்திய ரயில்வே வாரியம் உத்தரவின் பெயரில் பொன்மலை ரெயில்வே பணிமனையில் மருத்துவமனைக்கு தேவையான இரும்பு கட்டில்கள் தயாரிக்கும் பணியினை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பணியில் 20 தொழிலாளர்கள் மட்டும் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தம் 60 இரும்பு கட்டில்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
பொன்மலையில் உள்ள திருச்சி கோட்ட தலைமை ரெயில்வே மருத்துமனைக்கு 10 கட்டில்கள் கொடுக்கிறார்கள். கரோனா பாதிப்பில் நோயாளிகள் வந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பொன்மலை ரயில்வே ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு ஒன்று ஏற்கனவே தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள்.
50 கட்டில்கள் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரயிலுக்கு சம்மந்தமாக பொருட்களை தயாரித்து வந்த பொன்மலை ரயில்வே பணிமனை இந்த அவசரகால நெருக்கடி நேரத்தில் இரும்பு கட்டில்கள் தயாரித்து கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.