பொங்கல் பண்டிகையையொட்டி, தொடர்ந்து நான்கு நாள்கள் விடுமுறை என்பதால், சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் வருகை அதிகளவில் இருக்கும். குறிப்பாக காணும் பொங்கலன்று அனைத்து கோயில்கள், பொழுதுபோக்கு இடங்களிலும் மக்கள் கூட்டம் மிகுந்து இருக்கும். இதனால் கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு ஜன. 15- ஆம் தேதி முதல் 17- ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களுள் ஒன்றான கொல்லிமலைக்குச் செல்லவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் ஆர்வமாக சென்று வரக்கூடிய ஆகாய கங்கை அருவி, மாசிலா அருவி, நம்மருவி, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் நுழைவு வாயில் பூட்டப்பட்டு உள்ளது.
கொல்லிமலைக்குச் செல்லும் அடிவாரமான காரவள்ளி வனத்துறை சோதனைச் சாவடியிலும் உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாள்களாகவே கொல்லிமலைக்கு சுற்றுலா வரும் பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.