அண்மையில் தமிழக அரசு பொங்கல் பரிசு தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சை அரிசி மற்றும் சர்க்கரை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். ஜனவரி 2-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 3000 ரூபாய் உச்சவரம்புக்கு உட்பட்டு குரூப் சி, டி பிரிவு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் மிகை ஊதியம் வழங்கப்படும். குரூப் சி, டி பிரிவை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிகை ஊதியம், பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம் அரசுக்கு 221.42 கோடி செலவு ஆகும் என நிதித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.