‘கிட்டத்தட்ட நாங்க ஜெயிச்ச மாதிரிதான்..’ என்றார், அந்த ஆளும்கட்சி பிரமுகர். பக்கத்தில் இருந்த நண்பர் ‘கனவுலயா?’ என்று கலாய்த்தார். அதெல்லாம் ‘டாப் சீக்ரட்’ என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டினார், அந்தப் பிரமுகர்.
அதிமுக தரப்புக்கு வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை பிறந்த வழி இது; சொல்லிக்கொள்ளும் அளவுக்கு தமிழகத்தில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பில்லை என்ற தகவல் டெல்லி வரை சென்றதும், மாற்று ஏற்பாடுகளுக்கான யோசனை உதித்துள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும், கடந்த ஒரு வருடத்தில் ‘கரோனா’ அளவுக்கு, ஆட்சியாளர்களுக்கு வேறு எதுவும் ‘பாசிடிவ்’ ஆக நடந்ததில்லை. அதே ‘கரோனா’ இந்தத் தேர்தலுக்கும் பயன்படும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.
கரோனா இரண்டாவது அலை என்ற காரணத்தை முன்னிறுத்தி, தேர்தலுக்கு முன் ‘லாக்-டவுன்’ அறிவித்துவிட வேண்டியது. அதேநேரத்தில், தேர்தலையும் நடத்திவிட வேண்டும். எப்படியென்றால், ‘போலிங்’ சதவீதம் 70-லிருந்து 80 சதவீதம் வரை செல்லவிடாமல், 50 சதவீதம் என்ற கட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும். இருக்கவே இருக்கிறது – ‘முகக்கவசம் – சமூக இடைவெளி – பொது இடத்தில் கூடுவதைத் தவிர்ப்பது..’ போன்ற விழிப்புணர்வு ஆலோசனைகளும், அறிவுரைகளும்.
ஏற்கனவே, ஜனநாயகக் கடமையான வாக்களிப்பது குறித்து, அவ்வளவு அலட்டிக்கொள்ளாத, ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் நிரந்தரமாக உள்ளனர். கரோனா பீதியால், வாக்களிக்காத அந்த சதவீதத்தை அதிகப்படுத்துவதே, தேர்தல் நேரத் திட்டம். இதன் மூலம், ஆளும்கட்சியினரை வேகவேகமாக ஓட்டு போடச் செய்துவிட்டு, எதிர்க்கட்சியினருக்கு ‘தண்ணி’ காட்டிவிட முடியும் என்பது, ஒருவித நம்பிக்கையாக இருக்கிறது.
‘சாத்தியப்படாத அளவுக்கு, காதைச் சுற்றி மூக்கைத் தொடும் திட்டமாக அல்லவா இருக்கிறது!’ என்று கேட்டால், ‘கட்சி மேலிடத்தில் பேசிக்கொண்டதாக எங்களுக்குக் கிடைத்த தகவல். அவ்வளவுதான்!’ என்று கிளம்பினார், அந்தப் பிரமுகர்!