பொள்ளாச்சி சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் திருநாவுக்கரசை சிபிசிஐடி போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய சிபிசிஐடி போலீசாரின் மனு இன்று கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் திருநாவுக்கரசை நேரில் ஆஜர்படுத்தாமல் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற வளாகத்தில் பயிற்சி வழக்கறிஞர்கள், மாதர் சங்க அமைப்புகள் மற்றும் போராட்ட அமைப்புகளை சேர்த்தவர்கள் கூடியுள்ளதால் திருநாவுக்கரசு மீது தாக்குதல் நடத்தக்கூடும் என வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர் படுத்தப்பட்டான் திருநாவுக்கரசு. சுமார் 40 நிமிடம் நடந்த விசாரணைக்கு பிறகு 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து திருநாவுக்கரசை விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நடுவர் உத்தரவிட்டார்.
திருநாவுக்கரசை வீடியோ கான்பரன்ஸில் ஆஜர் படுத்தியது ஏன் என வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் முறையிட்டனர். உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து திருநாவுக்கரசு வீடியோ கான்பரன்ஸில் ஆஜர் படுத்தப்பட்டதாக நீதிபதி விளக்கமளித்தார்
சிபிசிஐடி போலீசார் 15 நாட்கள் கோரியிருந்த நிலையில் 4 நாட்கள் மட்டும் காவலில் எடுத்த விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து திருநாவுக்கரசை கோவை சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் கூட்டி சென்ற சிபிசிஐடி போலீசார் அவனிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.