கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி என்றாலே பல நூறு அப்பாவி பெண்களை நம்ப வைத்து வன்கொடுமையும் வன்புணர்வும் செய்த அரசியல் பின்னனி கொண்ட காமுக கொடூரன்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள்.
நூறுக்கும் மேற்பட்ட பெண்கள், ஆயிரத்தி நூறு வீடியோக்கள். அத்தனையும் மறைத்து ஒரு சில வீடியோக்களே என்று சொல்லி காமுக கொடூரன்களை காப்பாற்ற முயன்ற காவல் துறை அதிகாரிகள். ஆட்சியாளர்களும் அந்த கொடூரன்களுக்கு துணை நிற்பது போல தகவல்கள் வெளியான நிலையில் மாதர் சங்கங்களும் அரசியல் எதிர்கட்சிகளும் மாணவர்களும் களமிறங்கி போராடத் தொடங்கிவிட்டனர்.
இதனால் இன்றைய ஆட்சியாளர்கள் பதில் சொல்ல முடியாமல் தினறிக் கொண்டே பிடிபட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவினார்கள். ஆனால் பிடிக்கப்படாமல் உள்ள அரசியல்வாதியின் பிள்ளைகளை காப்பாற்றவே இந்த அவசரம் என்றாலும் முறையான விசாரணையோ பாதுகாப்போ இல்லை என்பது தான் உண்மை.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து நூழைவாயிலில் அமர்ந்து, காமுக கொடூரன்களுக்கும் அவர்களை காப்பாற்றும் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன், முறையான விசாரனை, சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து தண்டனை வாங்கிக் கொடுக்கும் பிரிவுகளில் வழக்கு பதிவாகும் வரை மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்கள் தொடரும் என்கின்றனர் மாணவர்கள்.