Skip to main content

"பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தின் மௌன அலறல் ஓயவில்லை!" - கமல் ட்வீட்!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

pollachi issue Kamal tweets!

 

பொள்ளாச்சி பாலிய வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் நிலையில், அ.தி.மு.க. கட்சியின் பொள்ளாச்சி நகர மாணவர் அணிச் செயலாளராக இருந்த அருளானந்தம் மற்றும் அவரது கூட்டாளிகளான பைக் பாபு, ஹேரென் பால் உள்ளிட்ட மூவரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர்.

 

அதைத் தொடர்ந்து மூன்று பேரும், கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மூன்று பேரையும் ஜனவரி 20-ஆம் தேதி வரை (15 நாள்) நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

இதனிடையே, இந்த வழக்கில் மேலும் இரண்டு பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் மூன்று பேரைக் கைது செய்ததாகவும் சி.பி.ஐ.யின் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. அதேபோல் அ.தி.மு.க. கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அருளானந்தத்தை நீக்கி, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். ஆகிய இருவரும் உத்தரவிட்டுள்ளனர்.

 

அரசியல் கட்சியினர் பலரும் இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது. குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்கவேண்டும் என தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ''பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் மௌன அலறல் ஓயவில்லை. ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் கைதாகியிருக்கிறார். இது பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்குப் பாதையாக இருக்கவேண்டும். வேறெதற்காகவோ பயன்பட்டுவிடக் கூடாது'' என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்