Skip to main content

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விரைவில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு!

Published on 11/08/2021 | Edited on 11/08/2021

 

Pollachi  case to be completed soon Highcourt  Order!

 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழ்நாட்டில், மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் ஏற்கெனவே இவ்வழக்கு தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு, சேலம் மத்தியச் சிறையில் இருக்கின்றனர். இந்தப் புகார் தொடர்பாக சி.பி.ஐ விசாரித்துவருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்துவருகிறது.

 

இந்த நிலையில், இந்த வழக்கில் ஆச்சிபட்டியைச் சேர்ந்த ஹேரேன் பால், வடுகபாளையத்தைச் சேர்ந்த பாபு என்கிற பைக் பாபு, அருளானந்தம் ஆகியோர் சி.பி.ஐ போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தற்போது சிறையில் இருக்கும் அருளானந்தம், பொள்ளாச்சி அதிமுக முன்னாள் நகர மாணவரணிச் செயலாளராக இருந்தவர்.

 

Pollachi  case to be completed soon Highcourt  Order!

 

அருளானந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு கடந்த 3ஆம் தேதி விசாரணைக்குவந்தது. அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும், ஆனால் சில விளக்கங்களைக் கீழ்நீதிமன்றம் கேட்டுவருவதாகவும், சிபிஐயில் ஆட்கள் பற்றாக்குறையால், வழக்கு விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

 

அப்போது ஆஜராகியிருந்த தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பொள்ளாச்சி பாலியல் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க அனைத்து ஒத்துழைப்பு வழங்க தமிழ்நாடு காவல்துறை தயாராக இருப்பதாகவும், குறிப்பாக எஸ்பி அந்தஸ்தில் ஒரு அதிகாரியை நியமித்து உதவத் தயார் என்றும் உறுதி அளித்தார். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.

 

Pollachi  case to be completed soon Highcourt  Order!

 

இந்நிலையில், இன்று (11.08.2021) இந்த வழக்கின் மீதான விசாரணையில், பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தினசரி அடிப்படையில் வழக்கை விசாரித்து முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அருளானந்தத்தின் ஜாமீனை தள்ளுபடி செய்தது. மேலும், சிபிஐ விசாரணைக்கு உதவும் வகையில் சி.பி.சி.ஐ.டி எஸ்.பி முத்தரசியை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்