வேலூர் டூ திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை நகரத்துக்கு அருகே இனாம்காரியந்தல் கிராம எல்லையில் சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடி விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளது என சிபிஎம், சிபிஐ மற்றும் விவசாய சங்கங்கள் போராடி வருகின்றன.
இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி மாலை 6 மணியவில் 4 சக்கர சரக்கு வாகனம் 20 ஆட்களை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது. அப்போது அந்த வாகனத்தின் பாஸ்டேக்கில் பணம் இல்லாததால் கேட் திறக்கவில்லையாம். பணியில் இருந்த தமிழ்செல்வன், தனுசு இருவரும், ‘வண்டியை ஓரம் கட்டுங்கள். உங்கள் பாஸ்டேக்கில் போதிய இருப்பு இல்லை, பணம் கட்டிவிட்டு செல்லுங்கள்’ எனச் சொல்லியுள்ளார்கள். வாகனத்தை டோல்கேட்டின் குறுக்காக நிறுத்திவிட்டு, ‘நீங்க பணம் அதிகமா எடுக்குறீங்க அதனால்தான் பணம் போச்சு’ எனத் தகராறு செய்துள்ளார் வாகன ஓட்டுநரான வட ஆண்டாப்பட்டைச் சேர்ந்த முருகன். இதுகுறித்து தமிழ்செல்வன், தனுசு இருவரும் தங்களது அடுத்த உயர்நிலை டோல்கேட் ஊழியரான ராம்சந்தரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் வந்து, ‘எத்தனை முறை வண்டி டோல்கேட் போய் வந்துள்ளது. இப்போது அவரது பாஸ்டேக்கில் உள்ள பேலன்ஸ்’ குறித்து கூறி 15 ரூபாய் குறைவாக உள்ளது எனக் கூறியுள்ளார்.
அப்போது அந்த வண்டியில் பயணம் செய்த சிவக்குமார் என்பவர், ‘15 ரூபாய்க்கு வக்கில்லாமலா இருக்கோம்? நீ கேட்கற பணம் தர்றோம்’ என்று சொல்லிவிட்டு அவர்களின் வீட்டுப் பெண்களை ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதமாகி இருதரப்புக்கும் கைகலப்பாகியுள்ளது. “இருடா என் ஆளுங்களோட வர்றன்..” என அங்கிருந்து சென்றுள்ளார் சிவக்குமார் என்பவர். அடுத்த ஒருமணி நேரத்தில் சிவக்குமார் தன்னுடன் பத்து பேரை அழைத்து வந்து டோல்கேட் அலுவலகம் முன்பு நின்றிருந்த ஊழியர் ராம்சந்தரை அடித்து உதைத்துள்ளனர். “இனிமே எங்க ஊர்க்காரங்க பெயரைக் கேட்டாலே பயப்படணும், காசே வாங்கக்கூடாது..” எனச் சொல்லியுள்ளனர். அடி வாங்கி பல் உடைந்த, கண்ணில் காயம் பட்ட டோல்கேட் ஊழியர் ராம்சந்தர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுக்கா காவல்நிலையத்தில், நடந்த சம்பவம் குறித்து சிசிடிவி பதிவுகளோடு டோல்கேட் மேலாளர் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். சி.எஸ்.ஆர் கூட போடவில்லையாம். நீங்க அடிச்சதா அவுங்களும் உங்க மேல புகார் தந்திருக்காங்க. வீணாக பிரச்சனை எதுக்கு. இரண்டு தரப்பும் காம்ப்ரமைஸ் செய்துக்கங்க எனச் சொல்லி பஞ்சாயத்து பேசியுள்ளார்கள் திருவண்ணாமலை தாலுக்கா போலீஸ் அதிகாரிகள்.
சம்பந்தப்பட்ட டோல்கேட் அலுவலகத்துக்கு வந்த ஒரு குறிப்பிட்ட மூன்று எழுத்துக் கட்சி நிர்வாகிகள் சிலர், ‘எங்க கட்சி நிகழ்ச்சிக்கு நன்கொடை வேணும்’ எனக் கேட்டுள்ளார்கள். அதெல்லாம் நாங்க முடிவு எடுக்க முடியாது. சென்னையில் உள்ள ஹெட் ஆபிஸ்தான் முடிவெடுக்கணும் எனச் சொல்லியுள்ளார்கள் அங்குள்ள ஊழியர்கள். முதல்முறை அமைதியாகச் சென்றவர்கள் இரண்டாவது முறையும் வந்து கேட்டுள்ளார்கள். அப்போது அங்குள்ள பணியாளர்கள் தங்களது மேலதிகாரிகளுக்கு கூறியுள்ளனர். அவர்கள் டோல்கேட் அலுவலகத்துக்கு வந்திருந்த சாதி சங்க பிரமுகர்களிடம், இப்போ செய்ய முடியாது இன்னும் இரண்டு வருடம் போகட்டும் தர்றோம் எனச் சொல்லியுள்ளார்கள். இரண்டு முறை அப்படி கேட்டும் நன்கொடை தரவில்லை என்கிற கோபத்தில், 3 மாதத்துக்கு முன்பு சுங்க கட்டணம் கட்டமாட்டோம் என அதே சாதிக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரின் உறவினர்கள் எனச் சொல்லிக்கொண்டு சிலர் பிரச்சனை செய்தார்கள். இப்போதும் அந்த குறிப்பிட்ட சாதிக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியின் தரப்பைச் சேர்ந்தவர்கள் தான் பிரச்சனை செய்து திட்டமிட்டே வந்து அடித்தார்கள். புகார் தந்த பின்பு, சமாதானமா போகலாம் வா என அடிபட்டவரை செல்போனில் தொடர்புகொண்டு மிரட்டுவதும் அதே பிரமுகர்கள் தான் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.
அவர்கள் கூட்டாக வந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரங்கள் இருந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லையாம். மாவட்ட உயர் அதிகாரிகள் சமாதானமா போங்க எனச் சொல்வது நியாயமா?