Skip to main content

மோடி வருகையை எதிர்த்து தீக்குளித்தவர் உயிரிழப்பு

Published on 12/04/2018 | Edited on 12/04/2018
darmalingum


ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் வசிப்பவர் பா.தர்மலிங்கம். இவர் தனது வயதான பாட்டியான ரத்தினம் அம்மாளுடன் வசித்து வருகிறார். 25 வயதான தர்மலிங்கம் 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். சிறுவயதிலேயே இவரது பெற்றோர்கள் இறந்துவிட்டனர். திருவிழா மற்றும் சந்தைகளில் பொம்மை பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். 

 

darmalingum


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் நடந்து வரும் தொடர் போராட்டங்களை உன்னித்து கவனித்து வந்த தர்மலிங்கம், செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை ஆர்வமாக பார்த்து வந்துள்ளார். 

 

darmalingum


தனக்கு தெரிந்தவர்களிடம் பேசும்போது, மத்தியில் இருக்கும் மோடி அரசு தமிழர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது என கூறியிருக்கிறார். எந்த பின்புலமும் இல்லாத இந்த இளைஞர் தமிழ்நாட்டிற்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி வருவதை தாங்கிக்கொள்ள முடியாமல், தனது எதிர்ப்பை காட்ட நேற்று இரவு முதல் வீட்டில் வேதனையோடு பேசி வந்துள்ளார்.

 

darmalingum 0055.jpg



இந்த நிலையில்தான் விடியற்காலை 3 மணிக்கு தனது வீட்டின் சுவற்றில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், காவிரி தமிழகத்தின் உயிர் நீர், மத்திய அரசுக்கு துணை போகிறது இந்த எடப்பாடி அரசு, பிரதமர் மோடியே தமிழகத்திற்கு வராதே எனது எதிர்ப்பு என எழுதி வைத்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை ஒரு கேனில் பிடித்து வீட்டிக்கு வெளியே சாலைக்கு வந்த தர்மலிங்கம், மத்திய அரசே தமிழர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதே, வேண்டும் வேண்டும் காவிரி வேண்டும், திரும்பி போ... திரும்பி போ... மோடியே திரும்பி போ... தமிழகத்திற்கு வராதே என கோஷமிட்டவாரே பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக்கொண்டு திடீரென தீ வைத்துக்கொண்டார். 
 

இவரது அலறல் சத்ததைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி அனைத்துள்ளனர். அதைத்தொடர்ந்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட தர்மலிங்கம் இன்று காலை 11 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 

பிரதமர் மோடி தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் சாராத ஒரு இளைஞன் தன் உயிரையே சமுதாயத்திற்கு தந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்