சேலத்தில், கைதியின் மனைவியிடம் செல்போனில் ஆபாச தகவல்களை அனுப்பி அத்துமீறல்களில் ஈடுபட்ட சிறைக்காவலர் அதிரடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியைச் சேர்ந்தவர் குபேந்திரன் (35). இருசக்கர வாகனங்களை பழுதுபார்க்கும் பட்டறை நடத்தி வந்தார். இவருடைய மனைவி நிர்மலா (29). (கணவன், மனைவி ஆகியோரின் பெயர்கள் கற்பனையானவை). இவர்களுக்கு 13 வயதில் ஓர் ஆண் குழந்தையும், 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. குபேந்திரன், இருசக்கர வாகனத்தை திருடியதாக மோகனூர் காவல்நிலைய காவல்துறையினர் கடந்த 2021ம் ஆண்டு கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கணவரை பார்ப்பதற்காக நிர்மலா அவ்வப்போது சேலம் மத்திய சிறைக்குச் செல்வார். கைதிகளை பார்க்கச் செல்வோர், அங்கு கோரிக்கை மனு எழுதிக் கொடுக்க வேண்டும். அந்த மனுவை பரிசீலித்த பிறகே அனுமதி வழங்கப்படும். மனு எழுதும் பிரிவில் சிறைக்காவலர் விஜயகாந்த் பணியாற்றி வந்தார். நிர்மலா கணவரைக் காண்பதற்காக சிறைக்குச் சென்றபோது, அவருடைய செல்போன் எண்ணை விஜயகாந்த் பெற்றுக் கொண்டார். இதையடுத்து தினமும் நிர்மலாவின் செல்போன் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஆபாச தகவல்களை அனுப்பி வந்துள்ளார். செல்போனில் அழைத்து, “எனக்கு உன்னை பாக்கணும் போல இருக்கு. உன் வீட்டுக்கு வரட்டுமா?” என்று கேட்டுள்ளார். அதற்கு ஆரம்பத்திலேயே நிர்மலா மறுத்துவிட்டபோதும், விடாமல் ஆபாச மொழிகளைப் பேசி தொந்தரவு செய்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் எல்லைமீறிய விஜயகாந்த், “சேலத்திற்கு வா, ஒருநாள் என்னுடன் தங்கிவிட்டுப் போ” என ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ந்து போன நிர்மலா, விரக்தியில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளவும் யோசித்ததாக கூறப்படுகிறது சிறைக்காவலர் விஜயகாந்த், இந்த விவகாரத்தில் இன்னொரு நூதன உத்தியையும் பின்பற்றி வந்துள்ளார். நிர்மலாவின் கணவர் பிணையில் வெளியே வந்து விட்டால், அவருக்கு செல்போனில் அழைத்து தொந்தரவு செய்வதில்லை. மேலும், தனது செல்போன் எண்ணையும் ஜாக்கிரதையாக பூட்டி வைத்துக் கொள்வாராம்.
கடைசியாக கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி நிர்மலாவின் செல்போனுக்கு அழைத்த விஜயகாந்த் மீண்டும் ஆபாசமாகப் பேசியுள்ளார். இதற்கு எப்படியாவது முடிவு கட்ட வேண்டும் என்று தீர்மானித்த நிர்மலா, இதுகுறித்து சேலம் மத்திய சிறை எஸ்பி (பொறுப்பு) வினோத்திடம் புகார் அளித்தார். சிறைக்காவலர் மற்றும் நிர்மலா ஆகியோரின் செல்போன்களுக்கு கடந்த ஆறு மாதத்தில் எந்தெந்த எண்களில் இருந்து அழைப்புகள் வந்தன என்பது குறித்த சிடிஆர் அறிக்கை பெறப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. இதில் காவலர் விஜயகாந்த், தனது உறவினர் ஒருவரின் பெயரில் ரகசியமாக செல்போன் எண்ணை வாங்கியிருப்பதும், அந்த எண்ணில் இருந்து மட்டுமே நிர்மலாவை தொடர்பு கொண்டு வந்திருப்பதும் தெரிய வந்தது.இதையடுத்து விஜயகாந்த்தை, செப். 11ம் தேதி உடனடியாக பணியிடைநீக்கம் செய்து மத்திய சிறை எஸ்பி (பொறுப்பு) வினோத் உத்தரவிட்டார். இதுகுறித்த அறிக்கை மற்றும் முழுமையான விசாரணை அறிக்கை, சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் மற்றும் டிஜிபி அமரேஷ் புஜாரி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.