கோவை பாப்பநாயக்கன் பாளையம் பண்ணாரி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ராமராஜ் என்பவரின் மகள் உமாஸ்ரீ (30). திருநங்கையான இவர், தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் இருந்த செல்ஃபோன் ஒன்று திருடு போனது. இதை அவரது வீட்டு அருகில் வசிக்கும் ஒரு பெண்தான் திருடியிருப்பார் என்ற சந்தேகம் உமா ஸ்ரீக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பெயரில் வழக்குப் பதிவுசெய்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ்காரர் மூவேந்தன் வேல்பாரி (50) என்பவரை சம்பவ இடத்திற்கு அனுப்பிவைத்தனர். அங்கு சென்று உமாஸ்ரீயிடம் விசாரணை நடத்திய மூவேந்தன் வேல்பாரி, ஆபாச வார்த்தைகள் பேசியதோடு பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார். இதேபோல உமாஸ்ரீ மொபைலைத் திருடியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்ணிடம் சென்று விசாரணை நடத்திய மூவேந்தன் வேல்பாரி, அந்தப் பெண்ணின் செல்ஃபோன் எண்ணை வாங்கிக்கொண்டு இரவில் வருவேன் என்று கூறி ஆபாசமாகப் பேசியுள்ளார்.
இதையடுத்து உமாஸ்ரீ கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில், விசாரணைக்கு வந்த போலீஸ்காரர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் அளித்தார். மேலும், விசாரணைக்கு வந்தபோது குடிபோதையில் இருந்ததாகவும் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து விசாரணை நடத்திய ரேஸ்கோர்ஸ் காவல் ஆய்வாளர், மூவேந்தன் வேல்பாரி மீது வழக்குப் பதிவுசெய்ய உத்தரவிட்டார். இதன்படி போலீஸ்காரர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடைபெற்றுவருகிறது.