நாகராஜன் – செய்யாதுரை வீடுகளில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை மூலம் 174 கோடி ரூபாய் பணம் 105 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பினாமியும், அவரது சம்பந்தியும் தமிழ்நாட்டில் நடத்திய ஊழல் கொண்டாட்டம் வெளிவந்திருக்கிறது. ஆனால் ஐடி ரெய்டு குறித்து முதல்வர் பழனிசாமி மெளனமாக இருப்பது ஏன்? என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நட்சத்திர ஒப்பந்ததாரர், நெடுஞ்சாலைத்துறையில் மிகவும் ஆழமாகத் தடம் பதித்துள்ள நாகராஜன் - செய்யாதுரையின் அனைத்து நிறுவன அலுவலகங்கள், வீடுகள், உறவினர்களின் வீடுகள் எல்லாவற்றிலும் அதிரடியாக வருமான வரித்துறை சோதனை இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கான்டிராக்டர், உறவினர் வீடுகளில் 120 கோடி ரூபாய் ரொக்கம், 100 கிலோ தங்கம் சிக்கியது. இரு கார்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கோடி ரூபாயையும் சேர்த்து 150 கோடி ரூபாயும், 100 கிலோவிற்கும் மேற்பட்ட தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி.கே ஸ்பின்னர்ஸ் பிரைவேட் லிமிடெட், எஸ்.பி.கே ஹோட்டல்ஸ், எஸ்.பி.கே அன்ட் கோ எக்ஸ்பிரஸ்வே பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது என்றும் செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளன.
முதலமைச்சரின் பினாமியாக இருக்கும் ஒரு ஒப்பந்ததாரர், அதே முதலமைச்சரின் சம்பந்தியுடன் கைகோர்த்துக்கொண்டு தமிழ்நாட்டில் ஊழல் கொண்டாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை வருமான வரித்துறை சோதனை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.
இவ்வளவு தகவல்கள் வெளிவந்த பிறகும் முதலமைச்சர் வாய்மூடி மௌனியாக அமைதி காக்கிறார்; நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் கட்டுக்கட்டாகப் பறிமுதல் செய்யப்பட்ட பிறகும் எவ்வித பதிலும் சொல்லாமல் பாராமுகமாக விரதம் இருக்கிறார்.
வருமான வரித்துறை சோதனை மேலும் தீவிரமடையும் இந்த நேரத்தில் கூட, மாநில மக்கள் என்ன நினைத்தால் எனக்கென்ன என்று வாயே திறக்காமல், முதலமைச்சர் கனத்த அமைதி காப்பதைப் பார்க்கும்போது ஊழல் ராஜ்ஜியம் பற்றி மக்களுக்குப் பதில் சொல்ல முதலமைச்சரிடம் ஏதுமில்லை என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. ஆகவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சுதந்திரமான விசாரணைக்கு நியாயமான வழிவிட வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்.
நாகராஜன்- செய்யாதுரை மற்றும் முதலமைச்சரின் சம்பந்தி உள்ளிட்டோரின் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்கள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்து விட்டு, மறு டெண்டர் கோர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.