வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமானோர் தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் மகளிர் சுய உதவிக் குழுக்களில் கடன் வாங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு பகுதியில் தனியார் நிதி நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்த அழுத்தம் தருவதாகவும், கடன் வசூல் செய்ய வரும் ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் கூறி கடந்த 10 நாட்களில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்நிலையில், தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ்களின் ஊழியர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் குடியாத்தம் காவல் நிலையத்தில் நடைபெற்றது. குடியாத்தம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 25க்கும் மேற்பட்ட நிதி நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய டிஎஸ்பி ரவிச்சந்திரன் கடன் வழங்கியுள்ள தனியார் நிதி நிறுவனங்கள் 6 மணிக்கு மேல் கடன் வசூல் செய்ய செல்லக்கூடாது கடன் வாங்குபவர்களின் மாத வருமானம் மற்றும் கடனை திருப்பி செலுத்தும் வழிவகையை ஆராய்ந்து கடன் கொடுக்க வேண்டும். ஒரே நபருக்கு பல்வேறு நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதை நிறுத்த வேண்டும், கடன் வசூலிக்க செல்பவர்கள் ஆபாச வார்த்தைகள் மற்றும் தகாத வார்த்தைகளில் பேசக்கூடாது, கடனை செலுத்தாதவர்களுக்கு சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பி நிதிமன்றம் செல்ல வேண்டும், RBI விதிகளை மீறி கடன் வசூல் செய்யும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ். பி. ரவிச்சந்திரன் கூறினார்.