கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அ றிக்கை:
''போலீஸ் பிடியில் சிக்காத குற்றவாளி திருநாவுக்கரசை காவல்துறையும், அதிகார மையமும் உயிரோடு பிடிக்க விரும்பவில்லை என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. அவனை விசாரிப்பதன் மூலமாக பல ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களின் துப்புதுலக்க வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. அவனுடைய பின்னணியில் அவனோடு சேர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் அதிகார மையத்தோடு தொடர்புடையவர்களாக இருப்பதால் காவல்துறை நியாயமான விசாரணையை நடத்த தவிர்க்கிறது என்ற செய்திகள் வெளியாகின்றன.
ஈஸ்வரன்
காவல்துறை உயர் அதிகாரிகள் இப்படிப்பட்ட குற்றத்தை மறைக்க முயல்கின்ற காவல்துறை அதிகாரிகளுக்கு பதிலாக நேர்மையான அதிகாரிகளை நியமித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முன்வர வேண்டும். தலைமறைவாக இருக்கின்ற குற்றவாளி உயிருக்கு ஆபத்தென்றால் காவல்துறைதான் காரணமாக கருதப்படும். காவல்துறையின் நேர்மையும், நியாயமும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வீடியோ காட்சிகளில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்துவதற்கு திறமையான பெண் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் சொல்கின்ற உண்மைகள் இரகசியமாக வைக்கப்படும் என்ற உறுதியும், நம்பிக்கையும் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் ஏற்படுத்த வேண்டும். இந்த வழக்கு மிக முக்கியமான வழக்கு. தமிழகம் முழுவதும் பிடிபடாமல் இருக்கின்ற குற்றவாளிகள் காவல்துறையின் பிடியில் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்கான முக்கியத்துவத்தை கொடுத்து உயர் அதிகாரிகள் செயல்பட வேண்டும். பொன்.மாணிக்கவேல் போன்ற அஞ்சாத நேர்மையான அதிகாரிகளை இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். ''