நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று 08/12/2021 பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய விமானப் படை சார்பில் அறிவிக்கப்பட்டது. நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது இந்த துயர நிகழ்வு.
வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்ட பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடலுக்கு அரசு உயர் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் அஞ்சலிக்கு பிறகு உடல் சூலூர் விமானப்படை சாலை மார்க்கமாகக் கொண்டுசெல்லப்பட்டது. உடல்களை எடுத்துக்கொண்டு சாலையில் சென்ற வாகனத்திற்கு ஆங்காங்கே திரண்டு நின்ற பொதுமக்கள் வழிநெடுங்க அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் உடலை எடுத்து சென்ற வாகனங்களை பின்தொடர்ந்து பாதுகாப்பிற்காக திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த போலீசாரின் வாகனம் சென்றது. அப்பொழுது குன்னூர் அருகே பறளியாறு மலைப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மலை மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்த 12 காவலர்களில் 7 பேர் காயமடைந்த நிலையில் 7 பேரும் மேட்டுப்பாளையம் மருத்துவமனைக்குத் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.