கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் காவல் நிலைய பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து கச்சராபாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் ராமன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செழியன், போலீஸ்காரர் கண்ணன், சுரேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கள்ளச்சாராயம் விற்பனை செய்பவரை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவின் பெயரில் கச்சராபாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப் இன்ஸ்பெக்டர் ராமன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செழியன், போலீசார் கண்ணன், சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, அக்ரா பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற கள்ளச்சாராய வியாபாரியை கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதன்பிறகு மணியை உளுந்தூர்பேட்டை கிளை சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையில் சிறையில் அடைக்கப்பட்ட மணி வைத்திருந்த 50,000 ரூபாய் பணத்தை அவரை கைது செய்ய சென்ற போலீசார் பறித்துக் கொண்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மணியின் உறவினர்கள் புகார் அளித்தனர். இது சம்பந்தமாக கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. ராஜலட்சுமியை விசாரிக்க மாவட்ட எஸ்.பி செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.
டி.எஸ்.பி ராஜலட்சுமி விசாரணை நடத்தியதில், மணியை கைது செய்ய சென்ற போலீஸ் டீமில் சென்ற கண்ணன் என்ற போலீஸ்காரர் 50 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து கண்ணனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் மாவட்ட எஸ்பி செல்வகுமார்.