Skip to main content

பிரிந்துசென்ற மனைவி... திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாத காதலி... கொலையாளியான காவலர்...

Published on 13/02/2022 | Edited on 13/02/2022

 

police surrenders in bodi police station on a case

 

தேனி மாவட்டம் போடியில் சனிக்கிழமை நள்ளிரவு பெண் வனக்காவலரை கழுத்தை நெறித்து கொலை செய்த ஆயுதப்படை காவலர் மதுரை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

 

மதுரை சதாசிவம் நகர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த பொன்பாண்டி என்பவரின் மனைவி சரண்யா. இவர் தேனி வனச்சரக அலுவலகத்தில் வனக்காவலராக பணிபுரிந்து வந்தார். போடியில் வனத்துறை அலுவலகம் அருகே ரமேஷ் என்பவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் நான்கு வருடம் முன்பு இவரது கணவர் சாலை விபத்தில் இறந்து விட்டார். இரண்டு குழந்தைகளும் சரண்யாவின் பெற்றோர் வீட்டில் உள்ளனர்.

 

இந்த சூழலில், தனியாக வசித்து வந்த சரண்யாவை கொலை செய்துவிட்டதாக மதுரை அனுப்பானடியை சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் திருமுருகன் என்பவர் மதுரை கீரைத்துறை காவல் நிலையத்தில் ஞாயிறன்று அதிகாலை சரணடைந்தார். இதனையடுத்து கீரைத்துறை போலீஸார் தகவலின் பேரில் போடி நகர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீஸார் போடியில் சரண்யா வசித்து வந்த வீட்டில் சென்று பார்த்தபோது சரண்யா கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரிந்தது.

 

விசாரணையில் சரண்யாவும், திருமுருகனும் மதுரை பகுதியில் வசித்து வந்த நிலையில், இருவரும் காவல்துறையில் சேருவதற்காகப் பயிற்சி வகுப்புக்குச் சென்றபோது பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். பின்னர், திருமுருகனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமான நிலையில், சரண்யாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதால் திருமுருகனின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனையடுத்து திருமுருகன் அடிக்கடி போடிக்கு வந்து சரண்யா வீட்டில் தங்கிவிட்டுச் செல்வது வழக்கம்  நேற்று சனிக்கிழமை இரவிலும் திருமுருகன் வழக்கம்போல் வந்துள்ளார். அப்போது, அவர்களுக்குள் திருமணம் செய்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதில் திருமுருகன் சரண்யாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். திருமுருகன் மதுரை ஆயுதப்படை காவல் பிரிவில் சிறப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார். 

 

இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போடி நகர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்தில் காவல்துறை மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு செய்ததில், கொலை நடந்த வீட்டிலிருந்து ஓடிய நாய் போடி பேருந்து நிலையம் வரை சென்றது. குற்றம் செய்தவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், கைரேகை நிபுணர்களும் போலீஸாரும் சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்